அக்டோபர் 2020

தாய்மை பூக்கள்

தாய்மை பூக்கள்



முகம் மலர்ந்தால் 
காதல் பூக்கிறது!
இதயம் மலர்ந்தால் 
நட்பு பூக்கிறது!
இரண்டும் சேர்ந்து 
ஒரு இதயத்தில் மலர்ந்தால்
தாய்மை பூக்கிறது!


கதிரவனுக்கு விடுமுறை

கதிரவனுக்கு விடுமுறை





கதிரவன் விடுமுறை நீடித்தால் 
வெண்ணொளி வீசும் நிலவொளியாய் 
அவள் முகம் கனவில் நீடிக்கும்!
கதிரவனே! ஓய்வெடுப்பாயாக!

பகல் நேர நித்திரை விழி தட்டினால் 
கனா களையும் என்றெண்ணி 
கனவோடு பயணிக்கும் அவள் 
இரு விழியில் ஒரு  இமை கூட 
திறக்க அனுமதி அவள் அளிப்பதில்லை!

குருதி தள்ளும் இதயம் 
காதலையும் சேர்த்து தள்ள 
இதயம் கொடுக்கும் தைரியம் 
இதழுக்கு இல்லை!
இறுக பூட்டி கொள்கிறது 
காதலை சொல்லாமல்!

கனவில் எல்லாம் சாத்தியமாகிறது - ஆதலால் 
வறண்ட வானிலை இன்று என்று 
கதிரவனே! வானிலை அறிக்கை
வானில் இருந்து தூக்கி எறிவாயாக!
இன்று என் கனா தொடரட்டும்!



எளிதாய் எழுதியது

எளிதாய் எழுதியது




 எட்டாத உன்னை
எழுத்தில் அடைக்க 
எட்டி உன் முகம் பார்த்து 
ஏட்டில் எழுத 
எண்ணமெல்லாம் சிறை பட 
எளிதாய் எழுதினேன்!
எனது நிலா கவிதையை!



உலக காபி தின வாழ்த்துக்கள்




நடை பாதை காபி 
நடை மேடையை அழகாக்க 
சற்றே தள்ளி நில்லுங்கள் 
சலனமின்றி சொல்கிறது 
இரவுகளை அழகாக்கிய 
இரவு நேர காபி!

நிறவெறி எனக்குள் இல்லை 
அரவணைக்கிறது 
தன்னோடு இணைய வரும் 
பாக்கெட் பால்தனை!
கறந்த பாலுக்கும் அடைக்கலம்!
பாக்கெட் பாலுக்கும் அடைக்கலம்!

ஆடையோடு சில காபி 
அம்மணமாய் சில காபி 
ஆவி பறக்கும் சில காபி
ஆனால் எல்லா காபியிலும் 
ஆனந்தம் ஆர்ப்பரிக்கும்!

பருவநிலை குளிரை 
மனம் சுவைத்து பருகிட 
ஏதோ ஓர் உணர்வு 
கரு நிற காப்பியாய்
கரங்களில் அமர்கிறது!
இதழ் சுவைக்கிறது 
இதயம் போதை கொள்கிறது! 

உனக்கு உரு கொடுத்து 
உயிரும் கொடுத்து 
காபி என்றொரு பரிணாம வடிவம்
கரங்களால் கொடுத்தேன்!
உனக்கு வரமும் கொடுத்து 
உனது அடிமை நான் ஆனேன்!
எனது போதை நீ ஆனாய்!
காபி வித்துக்கள் 
போதை மாத்திரைகள்!

நட்போ காதலோ 
சந்தித்துக் கொண்டால் 
சற்றே காபி அருந்துங்கள் 
கோப்பை காலி ஆகி 
மனம் நிறைந்து இருக்கும்!
புது உலகம் பிறந்திருக்கும்!

பகல் நேர கதிரவனும் சரி 
இரவு நேர நிலவும் சரி 
பல யுகங்கள் தொடர்கிறார்கள் 
எந்த காபியை அருந்துகிறார்கள் 
என்றுதான் தெரியவில்லை!

இன்னொன்று இங்கே தெரிகிறது 
துளியும் சிதறாமல் 
கதிரவன் காபி அருந்த
கதிரவனில் கறை இல்லை!
சுடும் கதிரவன் கூட்டல் சுடும் காபி 
கணக்கு சரி! ருசியும் சரி!

சில துளி சிதற விட்ட நிலாவோ 
இங்கே சற்று சறுக்கல் அடைய 
வெண் ஒளியின் எதிர்பதமாம் 
நிலவின் கறை அழகின் கிறுக்கல்!
சுடும் காபி கூட்டல் குளிர்ச்சி நிலா 
கணக்கு தவறு! விடை கறை!

உலகை வழி நடத்த
அமைதியாய் அறிவியலும் 
ஏதோ ஓர் மூலையில் அமர்ந்து 
காபி பருகதான் செய்யும்!
அது இடைவேளை காபியா 
இல்லை இடைவிடா காபியா 
என்றுதான் எந்த மானுடர்க்கும் 
தெரிவதில்லை, புரிவதில்லை!

உலக காபி தின வாழ்த்துக்கள்!