Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்
அஃறிணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஃறிணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கதிரவனுக்கு விடுமுறை

கதிரவனுக்கு விடுமுறை





கதிரவன் விடுமுறை நீடித்தால் 
வெண்ணொளி வீசும் நிலவொளியாய் 
அவள் முகம் கனவில் நீடிக்கும்!
கதிரவனே! ஓய்வெடுப்பாயாக!

பகல் நேர நித்திரை விழி தட்டினால் 
கனா களையும் என்றெண்ணி 
கனவோடு பயணிக்கும் அவள் 
இரு விழியில் ஒரு  இமை கூட 
திறக்க அனுமதி அவள் அளிப்பதில்லை!

குருதி தள்ளும் இதயம் 
காதலையும் சேர்த்து தள்ள 
இதயம் கொடுக்கும் தைரியம் 
இதழுக்கு இல்லை!
இறுக பூட்டி கொள்கிறது 
காதலை சொல்லாமல்!

கனவில் எல்லாம் சாத்தியமாகிறது - ஆதலால் 
வறண்ட வானிலை இன்று என்று 
கதிரவனே! வானிலை அறிக்கை
வானில் இருந்து தூக்கி எறிவாயாக!
இன்று என் கனா தொடரட்டும்!



மே மாத வெயில் | May month Veyil

may
May month veyil


உதடுகள் திறக்காமல்
உச்சத்தில் இருந்து கொண்டு 
அஃறிணை பொருளின் 
நியாமான எச்சரிப்பு!

மானுட பிறப்புகளுக்கு
ஞாயிறு என்றால் விடுமுறை 
ஞாயிராகிய எனக்கு அல்ல!...


ஆண்பால் கணணி - done


கருவிழி கண்ட கணணி திரை 
உன் மேல் காதல் கொள்ள 
உன் விரல் தொட்ட மயக்கத்தில் 
விசைப் பலகையும் மோகம் கொள்ள 
அஃறிணை கணணி 
ஆண்பால் என்று உணர்ந்தேன்!


இயற்கையின் சீற்றம்


மழைசாரலில் நனைந்திருக்கிறேன்
மனதை பறி கொடுத்திருக்கிறேன்
நதியின் வளைவுகள் 
நங்கையிடம் கூட இல்லை

மாற்றம் கொடுத்து 
மாற்றிக் காட்டியது 
மழையும் மண் சரிவும்.

உத்தர்கண்ட் பற்றி எழுத
உவமையும் 
உருவகமும் தேவையில்லை.

மரங்களை அழித்ததால் 
மண்சரிவை ஏற்படுதினாயோ?
மலராமலே பிஞ்சு மொட்டுகளை 
மண்ணில் பதித்தாயோ ?
மழலைச் செல்வமும் 
மக்கட் செல்வமும்
மகத்தானதல்லவா ?

தொலைந்து போன உயிர்கள் 
தொலைவிலா ? அருகிலா ?
தொலைக்காட்சி செய்தி கூட 
தெளிவாகத்  தெரிவிக்கவில்லை.

வெள்ளப்பெருக்கு 
வெகு விமரிசையாய்
அடித்துச் செல்லப்பட்ட 
அனைத்து வகை மரங்களோடு
அணிவகுப்பு யாருக்காக?

மிதந்து வந்த மரங்களும் 
மாளிகைகளும் சொல்கிறது
மீண்டு வர வருடம் ஆகுமாமே?

கரையைத் தாண்டி நீ வர 
கரைபுரண்டு வெள்ளம் ஓட
கலை இழந்து 
கற்சிலையாய் நாங்கள்.
கற்காலத்தை நோக்கி நாங்களும்
கடல் அன்னையை நோக்கி நீயும்.

அரசியலை நம்பவில்லை 
அன்னையே உன்னை நம்புகிறேன்
எங்கள் இயற்கை அன்னையே !
இனிமேல் வேண்டாம் 
இது போன்றதொரு 
வெள்ளப்பெருக்கும் மண்சரிவும்.




தென்றல்...


Thendral
Thendral
தலை குனிந்து நிற்கும் நெற்கதிரை 
தட்டி எழுப்பிச் செல்கிறது
இந்த தென்றல்!

கழனியில் உழைத்த 
உழவனின் வியர்வை 
சூரியனைக் கண்ட பனித்துளியாய்!
கரைந்து விடச் செய்கிறது
இந்த தென்றல்!

இன்று மலர்ந்தப் பூக்களுக்கும் 
நாளை மலரப்   போகும் மொட்டுகளுக்கும்
வாழ்த்துச் சொல்லி 
வருடிச் செல்கிறது.
இந்த தென்றல்!

சாதி மதம் கடந்து 
நானும் வருகிறேன்
தேகங்களை வருடுகிறேன் 
இதயங்களைத் திருடுகிறேன்.

பல இதயங்களைத் திருடிய 
இவன் இயற்கையின்
செல்லக் குழந்தை!





காலண்டர்...

Calendar kavithai
Calendar kavithai

காலம் என்னும் காலண்டர்
தினமும் ஒரு கிழமையை 
உதிர்க்கிறது.
காகிதப் பூக்கள் என்பதால் 
வண்டுகளும் சீண்டவில்லை.
தென்றலும் வருடவில்லை.

மானுடனின் வியாபாரப் புத்தி 
உன்னையும் விட்டு வைக்கவில்லை.
விளம்பரத்தை உன்னில் பதித்தான்.
விளம்பரம் மட்டும் தானா?
சாதி, மதம் , கட்சி ........

உழைப்பும் 
உணர்வுகளும் 
சிந்தனைகளும் 
தீர்மானிக்கதக் காலத்தை 
ராசி பலன் சொல்லிற்று.
கன்னி ராசிக்கு 
இன்று உற்சாகமாம் !

மூடப்பட வேண்டிய மூடநம்பிக்கைகள் 
மூடப்படாமல் இருக்கிறது உன்னுள்.
எமகண்டம் முதல் சூலம் வரை.
நீ என்ன செய்வாய் ?
சாஸ்திரங்கள் உன் தோழன் ஆயிற்றே!
சூலம் - கிழக்கு ....
உனக்கு மட்டும் 
இது விதி விலக்கு.

கடிகாரம் என்ற பெயரில் 
உன் தமையனும் அங்கே
தொங்க விடப்பட்டிருக்கிறான்.

சுவரில் தொங்கிக் கொண்டே 
மானுடர்களின் வாழ்க்கையை 
நொடிக் கணக்கிலும் 
நாள் கணக்கிலும்
ஆட்டுவிப்பது 
உங்களுக்குக் கை வந்த கலை.

அமைதியாக மின் விசிறி காற்றில் 
முனு முனுக்கும் நீ
என் காதலியின் 
முனு முனுக்குக்கு இணைதான்.

காலத்தை உணர்த்துபவன் 
என்பதால்தான் என்னவோ
உனக்கு மட்டும் விதி விலக்கு.
காலம் தாழ்த்திக்
காலையில் கிழிக்கப்படுகிறாய்.

இழந்த காலமும் 
இழந்த உயிரும் 
திரும்ப வராது
வருடத்தின் முதல் இதழிலும் 
காலம் பொன் போன்றது 
கடமை கண் போன்றது
உன் கடைசி இதழிலும் 
எழுதப்பட வேண்டிய 
மானுட வாசகங்கள்!





kadhal kavithai | கடல்


Kadal
Kadal Kavithai

வான மகள் 
ஆடையின் நிறமாம் 
நீலம் தனை 
பிம்பமாய்
பிரதிபலித்தாய்.
கண்ணாடி இல்லாமல்.

செல்போன் கோபுரங்கள்


Cellphone
Cellphone tower
இறந்த குருவிகளின் 
நினைவு சின்னமாய் 
ஆங்காங்கே  எங்கள் 
கிராமத்து  கழனிகளின் நடுவில் 
செல்போன் கோபுரங்கள்!

கடிகாரம்



Kadikaaram
Kadikaaram

பன்னிரண்டு எண்களை வைத்து 
மூன்றே மூன்று பேர் மட்டும்
விளையாடும் விளையாட்டிற்கு 
மானுடர்கள் வைத்த பெயர் 
கடிகாரம்!

ஒன்று முதல் 
பன்னிரண்டு வரையிலான எண்கள் 
படைக்கப்பட்டது உனக்காகத்தானோ ?

கூண்டுக்குள் அடைபட்ட முட்கள் 
முத்தமிட துடித்து முத்தமிடாமல் 
விலகிச் செல்கிறது!

முட்கள் என்பதால்
உரசல்கள் கூட 
இங்கு நடை பெறவில்லை!

உங்கள் கால்கள் 
ஆணியில் அடிக்கபட்டதால்
ஆணித்தரமாக எடுத்துரைகிறாய்! 
கடந்த காலம் 
திரும்ப வராது என்று!

உன்னை மானுடர்கள்
உள்ளங்கையில் அடக்கினாலும்
நீ காட்டும் காலத்தை மட்டும் 
மானுடர்களால் அடக்க முடிவதில்லை!
மானுடர்களின் சிம்ம சொப்பனமடா நீ!

உனது நொடி முள்ளின்
ஒரு அசைவு 
எவ்வளவு வலிமை 
என்பதை உணர்ந்தேன்.
பூங்காவில்
அவளுக்காக காத்திருந்த பொழுது!

நிமிட முள்ளின் ஒரு அசைவு 
எவ்வளவு வலிமை 
என்பதை உணர்ந்தேன்.
தேர்வு அறையின் 
இறுதி நேர்த்தில்!

மணி முள்ளின் ஒரு அசைவு 
எவ்வளவு வலிமை 
என்பதை உணர்ந்தேன்.
அவளுடன் மணிக்கணக்கில்
பேசி விட்டு பிரியும் பொழுது!

காலம் எனும் பூவை 
சுற்றி வரும் வண்டுகள் 
நீங்கள்தானோ?

காலம் எனும் பூ 
உதிர்வதற்கு முன் 
பறிப்பது 
மானுடர்களாகிய 
நமது சிந்தனையில் தான் உள்ளது!

காலம் பொன் போன்றது நம்
கடமை கண் போன்றது!
ஒவ்வொரு கடிகாரத்தினுள்ளும்
எழுத பட வேண்டிய 
மானுடர்களின்
புதிய திருக்குறள்!