அக்றிணை காதல் | Akrinai kaathal

Aluvalakam
Office love

அலுவலகம் நோக்கி அவசரமாய் நீ வர 
மழைத்துளியாய் பூத்திருக்கும் 
மழலை சிரிப்போடு வியர்வைத் துளிகள்!
உன் தேகத்தோடு உறவாடிக் கொள்ளும்!

அன்ன நடையை அவசரமாய் நீ இட்டு 
அலுவலகமும் வந்து சேர்வாய்
வியர்வை துளிகள் மட்டும் சோர்வாய்!

சுட்டு விட்ட வியர்வை நீரை 
இதழ் காற்றால் ஊதி அணைப்பாய்!
ஓய்வெடுக்க செல்லும் வியர்வை துளிகள்
நாளை வருகிறேன் என்று!

தொலைவில் இருந்து நீ வருவாய் - ஆதலால் 
உன் களைப்பறிந்து களையிழந்து 
தண்ணீர் பாட்டிலில் நீர்த் துளிகள்!

கரம் கொண்டு பாட்டிலை நீ பற்ற 
உயிர்த்தெழும் நீர்த்துளிகள் 
உன் தொண்டை நினைத்து 
நீர்த்துளிகள் கள் தாகம் தணிக்கும் 
உன்னத சுகம் அதில் காணும்!

எஞ்சிய நீர்த்துளிகளின் ஏமாற்றம் 
எவர்க்கும் புரியாது 
என்னைத் தவிர!

அருகருகே அமர்ந்திருப்போம்- ஆதலால் 
ஆரம்பித்து வைப்பாய்!
வழக்கம் போல அந்த கவிதையை
எப்போ வந்தீங்க?

கவிதைக்குப்  பதில் நான் சொல்லி 
உன் முகம் நோக்கி கருவிழி நான் காண்பேன்!
உன் விரல் தொட்ட மோகத்தில் 
கணனியோ உன் மேல் காதல் சொல்லும்!
உன் கணணி காதல் எவர்க்கும் புரியாது 
என்னைத் தவிர!

கிழித்தெறியும் காகித நாட்காட்டியில் 
நான் சேமிக்கும் அந்த ஒரு காகித நாள்!
மழலையாய் நான் மலர்ந்த நாள்!
குப்பை தொட்டி சென்றடையா 
அந்த காகித நாளும் வந்தது!

என் கரம் தொட்டு நீ வாழ்த்த 
தேகத்தில் மின்னூட்டம் நான் பெற்றேன்!
உன் கரம் தொடா மீதி நாட்கள் 
மின்வெட்டு நான் அறிந்தேன்!

ஆணவமில்லா உன் அழகுச் சிரிப்பு 
அழகானவள் நீ என்று எடுத்துரைக்க 
பெண்மையின் இலக்கணம் நீ என்று 
உலகுக்கு எடுத்து உரைத்தேன்!
பெண்மைக்கான உரைநடை நீ!

உண்ட மயக்கமும் பகல் தூக்கமும்
உனக்கும் எனக்கும் பொழுது போக்கு!
சுக்கு மிட்டாயோ சுவிங்கமோ 
நம் பொழுது போக்கின் ஆறுதல்!

உடல் நலம் குன்றி நீ இருக்க 
அலுவலக விடுப்பு நீ எடுத்தாய்!
குளிருட்டப்பட்ட அலுவலகம்
அனல் காற்று வீசியது!
நீ இல்லாத ஒரு காரணத்தால்!

உனக்காக காத்திருக்கும் 
கணனிக்கும் அலுவலகத்திற்கும் 
இதழ் வலிக்க ஆறுதல் சொல்லி
அமைதி காக்க செய்வேன்!
எனக்கு ஆறுதல் சொல்ல 
ஆளில்லாமல் நான் தவிப்பேன்!

அலுவலக சுழற்சி மீண்டும் தொடர 
அடுத்த நாள் அலுவலக நாள்!
அவசரம் உன்னில் தொற்றிக் கொள்ளும் 
அலுவலகம் உன்னில் காதல் கொள்ளும்!

மாலை வேளை நெருங்கி விட 
இல்லறம் தேடி நீ செல்வாய்!
இனிய விடியல் உதயமாகும் வரை 
அலுவலகமும் அக்றிணை பொருளும் 
உனக்காக காத்திருக்கும்!

ஒரு நாள் சொல்லி விடலாம் 
உன் மீதான காதலை என்று! 
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக