என் அருகே நீ இருந்தால் | En aruke nee irunthaal

என் அருகே நீ இருந்தால் | En aruke nee irunthaal


வந்து போகும் உன் கனவுகள்
விடியலோடு விடை பெறாது
விடை பெறாத உன் நினைவுகள் 
விழியின் ஓரமாய் தேங்காது!

உனக்கும் எனக்கும் தூதுவானாய்
தூதுவாக வந்த மூச்சுக் காற்று
வான் வெளியோடு கலவாது
நம் மனதோடு கலந்திருக்கும்!

வரமாய் வந்த உறவு நீயென 
உலகறிய செய்திருப்பேன்!
உன்னில் மட்டும் நான் என்று 
உன் உயிரோடு கலந்திருப்பேன்!

உன் குறிப்பறிந்து பணிவிடை 
உனக்கு மட்டும் செய்திருப்பேன்
உன் உதடுகள் உத்தரவிடும் முன் 
உன் முன்னே நின்றிருப்பேன்!

உன் கரம் தொட்டு வீதி உலா
தினமும் வந்திருப்பேன்!
உன் உள்ளங்கையில் காதல் ரேகையாய்
உன்னோடு இருந்திருப்பேன்!

விழிகள் ஏதும் இல்லாமல் 
பூவிதழ் வருடும் காற்றாய் 
உன் முகவரியது  தெரியாமல்
உன் நினைவோடு வாழ்ந்திருக்க மாட்டேன்!

காதல் அது உயிரெழுத்துக்கள் அல்ல
கவலை கொண்டிருக்க மாட்டேன்!
கவலை கொண்டிருப்பேன் 
உன் பெயர் உயிரெழுத்துக்கள் அல்ல என்று!

உன் நிழற்படம் நான் காண 
விழியது சுவை நரம்பு பெற்றிருக்கும்
அருகில் நீ இருந்தால் 
அமிர்த சுவை தெரிந்திருப்பேன்!

மணமேடை நம் மனம் தாங்கி 
மண வாழ்க்கை மணம் பெற்றிருக்கும்
மகிழ்வோடு இருந்திருப்பேன் 
மணவாளனே உன்னோடு இருந்திருப்பேன்!

எனக்கு மட்டும் ஏன் இப்படி 
கேள்விகணை தொடுத்திருக்க மாட்டேன்!
கரம் கூப்பி தெய்வம் முன்னே 
கண் கலங்கி நின்றிருக்க மாட்டேன்!

எல்லாம் கை கூடியிருக்கும்
என் அருகே நீ இருந்தால்!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக