2016

மனக் கதவு | manak kathavu

mana kathavu kavithai
Manak kathavu


தவற விட்ட கடந்த வாழ்க்கையை 
விரல் நுனி கொண்டா தேடுவேன் 
எங்கோ கதவுகள் தாழிடப்பட்டு
எதிர் முனையில் தேடுகிறேன்!

விதை இல்லா வேர் ஏதும் இல்லா
நட்சத்திரம் பூவாய் தெரியுது
என்னோடு நித்தமும் பயணித்த 
வாழ்க்கை மட்டும் தெரியவில்லை!

என் சுவாசக் குழல் புகுந்த காற்றை
அறிவியல் செய்து கூட  அறிந்திடுவேன்
ஆறறிவு கொண்டு அறிய முடியாததை 
எவ்வறிவு கொண்டு அறிந்து கொள்வேன்!

எதிர் காலத்தை கனவுகள் சொல்லுது
கடந்த காலம் சொல்ல களைப்பாகுது
விழி மூடி தூங்கினால்தானே 
கனவுகளும் ஏதேனும் வழி சொல்லும்!

காற்றோடு காற்றாய் கலந்தாலும் 
சல்லடை இட்டு பிரித்திடுவேன்
காயங்களோடு மீட்டு விட்டாலும் 
கண்ணீர் கொண்டு மருந்து இட்டுடுவேன்!

கடந்த வாழ்க்கை தவறவில்லை 
களைப்போடு தேட வேண்டாம் 
கவலை களைந்து விட்டு திறக்கலாம்
கதவுகள் இது மனக் கதவுகளே!






கலைந்த விரதம் | kalaintha viratham



விரதம் காக்கும் விழிகளை 
விரதம் கலைக்க வைத்தாய்!
உன் விழி கண்ட சில நொடிகளால்!

தண்டனை | Thandanai

lip
Biting lip

தண்டனை வேண்டி தவறிழைத்து 
உன் முன்னே நான் நிற்க
தண்டனை கொடுத்து விட்டாய்!
உனக்கு நீயே உதடு கடித்து!

மழை மொட்டுக்கள் | malai mottukkal


காய்ந்த முள்ளின் நுனியில் 
மலர்ந்து விட்டன 
மழைத் துளையின் மொட்டுக்கள்!

உதட்டுச் சாய வேண்டுகோள்

lips kavithai
Uthaduch chaaya kavi

இதழ் உதிர்த்த வார்த்தைகளை 
இதழோடு நீ ஒட்டிச் சென்றால் 
காலி இதயத்தோடு கவி எழுதினால் 
என் கவிதை  எப்படி சுகம் பெறும் ?
உதட்டுச் சாயத்திற்கு வேண்டுகோள் !





முடிவு


முடிவு காணும் முன்
முடிந்து விட்ட கவிதை
முற்று பெற்ற வாழ்க்கை!

எல்லாம் தாண்டி | Ellam thaandi

Thaasi
Vibachaari Kavithai
பசி தீர்க்கும்  எல்லா உணவிலும்
ஏதோ ஒரு முனகல் அறிந்தேன்!
தேக ஆசை கொண்ட ஆடவனின்
பணத்தின் உணர்ச்சி என்று அறிந்தேன்!

தேக ருசி கொண்ட கழுகுகள்
வீடு வாயில் வரை தூரத்தின!
கட்டிலோடு தொலையவில்லை
கடந்து போன கட்டில் உறவுகள்!

பேருந்தில் உரசுபவன் முன்னே
தலை நிமிர்ந்து பேசுகிறேன்
பத்தினி வேஷம் போடுகிறேன்
என் தொழில் அவன் அறியாதலால்!

பல வீட்டு கட்டில் கால்கள்
பழுதடைந்தோ சுகமில்லாமலோ ஆனதால்
பழகிப் போனது பலருக்கு என் கட்டில்
பக்குவப்பட்டு நாசமானது என் மனது!

வலிக்காமல் வாழ்க்கை இல்லை
மறைமுகமாக சொல்லி செல்கிறது
ஒவ்வொரு கடந்த இரவுகளும்
சில நாள் என் தேகத்திற்கு விடுமறை!

வளையல் என்றால் உடைகிறது
காப்பு என்றால் வளைகிறது
அணியும் ஆபரணங்கள் உணர்த்துகிறது
கலியுக ஆடவர்களின் காம ஆசையை!

கசங்காமல் உடுத்தி செல்லும் ஆடை
கசங்காமல் திரும்பி வர
கசங்கிய காகித பண கையோடு
கசங்கி இருக்கும் என் தேக மது!

பாதங்கள் படிதாண்டி வெளியேற
வழி மறித்து நிற்கும் மகனிடம்
பதில் எதுவும் சொல்லமுடியவில்லை
எங்கு செல்கிறேன் என்று!

செய்யும் தவறுக்கான காரணத்தோடு
இதழ் சிரித்து இதயம் அழுது
நகர்கிறது என் வாழ்க்கை
கலியுக ராமர்கள் இல்லை - ஆதலால்!




என் கல்லூரி காதல் க(வி)தை

என் கல்லூரி காதல் க(வி)தை

எட்டிப் பிடிக்க நினைத்த கவிதையெல்லாம் 
என்னைக் கண்டும் காணமல் செல்ல 
எட்டிப் பிடித்துக் கொடுத்தவள் 
எனதருகே வராமல் ஒதுங்கிச் சென்றாள்!

அவள் விழியோ காந்தத்தின் வட துருவம் 
என் விழியோ காந்தத்தின் தென் துருவம் 
இருந்தும் ஏன் இருவரும் ஓட்ட வில்லை
காதல் அறிவியலை சபித்துக் கொண்டேன்!

இருந்தாலும் என்றாவது ஒட்டிக் கொள்ளும் 
அதுதான் காந்த விழியின் காதல் அறிவியல்
வகுப்பு முடிந்து கலைந்து செல்வோரில் 
கவனமாய் தேடும் எனது தேடல் விழிகள்!

நட்சத்திர அணி வகுப்பாய் பெண்கள் செல்ல 
ஒற்றை முழுமதியாய் அவள் செல்வாள்
இவள் வருகை எதிர்பார்த்து நந்தவன தேராய் 
தன்னிலை மறந்து காத்திருக்கும் பேருந்து எண் 4!

இவள் பாதம் பேருந்தினுள் மெல்ல பதிய 
பேருந்து இயந்திரமும் காதல் கொள்ளும் 
இயந்திர மனிதனாம் எந்திரனைப் போல!
எட்டி நின்று ரசிப்பேன் மகளிர்  பேருந்து ஆதலால்!
                 
                                                                              தொடரும்...



பஞ்சுப் பொம்மை | panjup pommai




பஞ்சணையில் அமர்ந்திருக்கிறது 
பஞ்சுப் பொம்மை!
உன் கூந்தல் பூக்கள்!

காதல் சொல்ல வந்தேன் | Kaathal solla vanthen

Hot
Kaathal sol

என் விழிகள் நகலெடுத்த 
முதல் காதல் நிழற்படமாம் நீ!
காதல் அறியாத உன் விழிகள் 
முதல் காதலை உணரட்டும்!

சிறகில்லாமல் பறக்கும் கருங்கூந்தலில்
சிறகில்லாமல் மாட்டியவன் நான்!
கருங்கூந்தலில் கருப்புநிற வேரிட்டு
கடைசிவரை வாழ நினைக்கிறேன்!

பாரமில்லா உன் இடை அழகால்
பாதங்கள் சுகம் பெற்றிருக்கிறது!
பாரம் தாங்க பழகி கொள்கிறது 
பாரமில்லா என் காதல் இதயம்!

பிறவிக்குருடன் பார்வை பெற்றேன்
அதிலும் முதல் பார்வை உன் முகம்!
வானம் இடிந்து வீழ்ந்த நிலா
வீற்றிருக்கிறது உன் நெற்றியில்!

விரல் தொடா வீணையாய் 
வீணாய் போகாது என் வாழ்வு!
உன் கரம் தொட காதல் நடையோடு 
வந்தேன் ! காதல் சொல்ல வந்தேன்!







அவள் கண்கள் | Aval Kankal

LoveEyes
Enchanted Slogan
இதழ் இல்லாமல்  
உச்சரிக்கும் 
வசிய மந்திரம்!

கண்ணாடி முகம் | Kannadi Mukam

Mirror
Kannadi Mukam
உன் முகம் தினம் கண்டு 
தன் முகம் தினம் பார்த்தது
உன் வீட்டுக் கண்ணாடி!

ஜோதிட வாழ்க்கை | Jothida vaalkai

kai kavithai
Kai Rekai


அறிமுகம் அல்லாத
அன்பர்களின் கை ரேகையில்
உலவுகிறது
இவர்கள் வாழ்க்கை!