![]() |
Paithiyakaaran Kavithai |
பாதங்கள் வகுத்த வழியோடு
வலிக்காமல் பயணித்து
உடல் சொல்லி அமர்வது என் வழக்கம்!
சில நேரம் காதல் கொண்ட வாழ்க்கை
சில நேரம் உதறிய உறவுகள் - என்னை
தனிமையில் உலவ வைக்கிறது!
சில நேரங்களில் சாப்பாடு பிச்சையாக
சில நேரங்களில் தானமாக
சில நேரம் விதி உடன் வருவதில்லை!
உலகத்துக்கு என்னை பிடிக்கவில்லை
எனக்கும் உலகம் புடிக்கவில்லை
பூமிக்கு தத்துப் பிள்ளை - ஆதலால்
விட்டு வைத்திருக்கிறது!
அழகை மயக்கும் ரோஜாவும் தெரியும்
பகையை முடிக்கும் கூர்முனை கத்தியும் தெரியும்
காதலும் பகையும் தெரிவதில்லை!
இரவில் தாய் மடி தேடி அலைந்தேன்
தேடலில் எதுவும் எட்டவில்லை
சாலையோர மேடையே இறுதியில் தாய் மடியாய்!
நான் உளறுவது பிற விழிகளுக்கு தெரியும்
நான் அழுவது எனது விழியில் புலப்படாது
பைத்திய மனஙகள் மனதுக்குள் அழுகிறது!
பனியும் வெயிலும் பாடம் நடத்தின
கிழிந்து போன என் கந்தல் துணிக்கு
எந்த பாடமும் விளங்கவில்லை!
கண்ணீர் வந்தே தேய்பிறையானேன்
மதிப்பில்லா என் கண்ணீருக்கு
வளர்பிறை என்ன தேய்பிறை என்ன ?
எல்லை என்று சொல்வது எதிலும் உண்டு
எண்ணில் அந்த எல்லையை தேடினேன்
எட்டாத என் எல்லையை என்னவென்று சொல்ல !
வயிறு பசித்தால் சாப்பாடு
தாகம் எடுத்தால் தண்ணீர்
பஞ்சத்திற்கு வளைந்தது என் உடல்!
இதுவும் கடந்து போகும் என்ற
பொருந்தாத வார்த்தையுடன் அழுகிறேன்
கடைசிவரை பைத்தியக்காரனாய்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக