உதிரிப் பூ | Uthirip Poo


உனையே நினைத்து உருகி
உயிர் கொண்ட  என் உடலில்
உயிரோட்டம் இன்றும் உள்ளதா
என் தலைவா நானறியேன்!

நிரந்தரமாய் என்னோடு வாழ 
நினைவுகளை தினம் நகர்த்தி 
நிதமும் அழும் விழியது 
இயல்பாய் மாறுமா நானறியேன்!

உன்னோடு பழகிய நாட்கள் 
ஊரார் பார்வையில் உருண்டோட 
என்னோடு நகரவே இல்லாதிது 
மறுஜென்மமும் தொடருமா  நானறியேன்!

காதல்சுகம் கிடைத்து விட்டதென்று  
கருங்கல்லை கடவுளாய் நினைத்து 
கரம்குவித்து நன்றி செய்தேனே
கடவுள் இருக்கிறானா நானறியேன்!

இதயத் துடிப்பு நின்றதென்று 
இறந்து நான் இடுகாடு சென்றாலும் 
உன் நினைவால் துடிக்கும் 
இதயத்துடிப்பை எவரறிவர் நானறியேன்! 

ஒன்று மட்டும் நான் அறிவேன் 
உன் தோளில் சாய ஆசை கண்டு 
உனக்காய் பிறந்து உன்னை அடையா
மலர்ந்து உதிர்ந்த உதிரிப் பூ நான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக