Thanthai Makal |
விருப்பமில்லா வெயிலோடு
சண்டையிட்டு களைத்து திரும்ப
முகம் பார்த்த என் வீட்டு கண்ணாடி
முகம் அலச உத்தரவிட்டது!
இரு கரங்கள் சிறு குவளையாய்
பொறுக்கிய நீர் தன்னில்
முகம் அலசி தொலைகாட்சி முன்
சம்மனமிட்டு அமர்ந்தாயிற்று!
தொலைக்காட்சி ஒலியை தாண்டி
செவியில் நுழைந்தது அந்த ஒலி
அப்பா சாப்பாடுறீயா ? - திரும்பினேன்
வெற்றுப் பாத்திரம் ஏந்தி என் மகள்!
அம்மா சாப்பாடு தருவாள் என்றேன்
அகம் கடிந்து கொண்டாள்
இன்று என் சமையல்
இப்போ நீ சாப்புடுவீயா ? மாட்டியா ?
மகளதிகாரம் என்பதால் அடங்கி விட்டேன்
பரிமாறு சாப்பிடலாம் என்றேன்
வெற்றுப் பாத்திரங்கள்
அணி வகுப்பெடுத்து முன் அமர்ந்தன!
இங்கே எங்கே சாதம் இருக்கிறது என்றேன்
விழி கொண்டு தேடியவள்
வெற்றுப் பாத்திரம் கையில் ஏந்தி
வெற்றுக் கரண்டியோடு பரிமாறினாள்!
இதழ்கள் திறந்து சிரித்து விட்டேன்
சாப்பிடும் போது என்ன சிரிப்பு ?
ஒழுக்கம் கற்றுக் கொடுத்தாள்
மீண்டும் மகளதிகாரம் அடங்கி விட்டேன்!
உப்பு காரம் எல்லாம் இருக்கா ?
காரம் இல்லா இனிப்பான கேள்வி
ஆம்மாமா! சூப்பரா இருக்கு என்றேன்!
சரி , சாப்பிடும் போது பேசாதே என்றாள்!
இடையிடையே வெற்றுக் கரண்டிகள்
இடைவிடாமல் பரிமாறின.
வேறு ஏதாவது வேணுமா ?
இடைவிடாத கேள்விகளும் தொடர்ந்தன!
வெற்று வயிறு நிரம்பியது
விடை பெறட்டுமா ? என்றேன்
இருப்பா, தண்ணீர் இங்கே இருக்கு என்றாள்
கரம் கழுவி எழுந்து நின்றேன்!
கரை படியா பாத்திரங்கள்
கழுவி கவிழ்த்து வைத்தாள்
விளையாட்டு முடிந்ததா? என்றேன்
சாப்பாடுதாம்ப்பா முடிந்து இருக்கு என்றாள்!
உணவை விளையாட்டு என்றெண்ணிய
உணர்வில்லா என் பெரு மூளையை
உணர்வுள்ள என் இதயம் சுட்டுவிட
உற்று நோக்கினேன் என் மகளையும்
உறங்கிய வெற்றுப் பாத்திரங்களையும்!
வெற்றுப் பாத்திரங்கள் எல்லாம்
பாசத்தின் அட்சய பாத்திரங்கள்
பரிமாறிய உணவுகள் எல்லாம்
பாசத்தின் பசி போக்கிகள்!
மகளதிகாரம் எல்லாம்
மரணம் தாண்டியும்
மரணிக்காமல் நினைவில்
மறவாமல் வர வேண்டும்!
சூப்பர்
பதிலளிநீக்குநன்றி சங்கர்!
நீக்குஅருமையான கவிதை.. மகன்திகாரமும் முயற்சிங்கலளேன்
பதிலளிநீக்கு