ஏ மேகமே !
பகலவனின் பார்வை
கொடூரத்தால் பலனின்றி போனாய் !
தன் குளிர் காதலியோடு
சண்டையிட்டு வெப்பத்தை தழுவி
வியர்வையை பரிசளிக்கும்
தென்றல் காற்றிடம்
நேரம் கடன் வாங்கி
தேசம் எங்கும் பயணித்து பார் !
வெள்ளை கூந்தலாய்
அருவி வழிந்தோடிய மலைகள் ...
கூந்தல் இழந்த பருவபெண்ணாய்..
அழகு இழந்து இருப்பதை பார் !
மாலை வான நட்சதிரமாய்
பூக்கள் குலுங்கிய சோலைகள்..
பாலை தேசமாய் படர்ந்திருக்கும்
நிலையை பார் !
நீராடிய பெண்ணின்
முகத்தில் நீர்த்துளியாய்
பனி படர்ந்த புல்வெளிகள்
பாழ் பட்டிருக்கும் சோகம் பார் ...
நஞ்சையும் புஞ்சையும்
விளைந்த நிலங்கள் எல்லாம்
செருப்பின்றி நடந்த பாதமாய்
வெடித்து கிடப்பதை பார் !
மீன்கள் துள்ளிய நீர்நிலைகள்
தன் தாகம் தீர்க்க நீரின்றி
தவிப்பதை பார்...
நிலைமை பார்த்த பின் ...
உன் கடல் காதலியோடு
வான வீதியில் சரசமாடி
மழை குழந்தையை தா !
மண்ணின் மகிழ்ச்சிக்காக !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக