வெளி நாடு வாழ் "இந்தியனாக"...


திரை கடல் ஓடி திரவியம் தேடும் இவன் 
வரும் முன் மறப்பதில்லை 
வாசனை திரவியம் வாங்குவதற்கு!

பாஸ்போட் விசா எதுவும் இல்லாமல் 
இவன் கனவும் கடல் தாண்டி வருகிறது
பிறந்த மண் தேடி!

மண் வாசனை என்றால்
என்னவென்று இவனிடம் கேட்டுப் பார்.
மனம் திறந்து மணமாக பேசுவான்!

தமிழ் நாட்டின் விழாக்கள் 
இவன் அறைத் தொலைக்காட்சியில்  
தெளிவாகத்தான் தெரிகிறது!

கைபேசியின் அலைகளுக்குள் 
இவன் சொந்தங்களின் குரல்கள்
முகம் காட்டி மறைகின்றன!

கடல் தாண்டி இருப்பதால் 
இவன் சிந்தும் வேதனைக் கண்ணீர் 
இந்திய எல்லையைக் கூட
தொடுவதில்லை.

சொர்க்கமே என்றாலும் 
அது நம் ஊரைப் போல் வருமா
பாடலை பல முறை கேட்டிருப்பான்.
பரவசம் அடைந்திருப்பான்.
பாட்டு முடியும் வரை 
பகல் கனவும் கண்டிருப்பான்!

வியர்வைத் துளியாய் மாறிய 
தினாரும் ரியாலும்
இந்திய ரூபாயாக மாறும் போது
மணம் வீசத்தான் செய்கிறது.

தோற்றுப்போன மல்லிகை  மணம் 
துயரம் தாங்கி 
ஒற்றை காலில்
மௌனம் சாதிக்கிறது.

வேற்றுமையில் ஒற்றுமை
துணைக் கண்டமாக
இவன் தங்கும் அறை.
கடல் நாடு தாண்டி வாழ்ந்தாலும்
வெளி நாடு வாழ் "இந்தியனாக".

No comments:

Post a Comment