பெயர் தெரியாத
என் சிறகுகள் இல்லா தேவதைக்கு...

அழகின் எல்லை எதுவரை என்று 
நான் ஆராய்ந்த பொழுதுதான் 
உன்னை முதலில் கண்டேன்!

அழகு என்னும் அளவுகோலின் 
ஆரம்பமும் சரி!
உச்சமும் சரி!
நீயே! நீ மட்டும்தான் பெண்ணே!

மன நிம்மதி தேடி 
ஆலயம் செல்கிறேன் - உன்னை 
முதலில் சந்தித்த பூங்காவிற்கு.
முதல் சந்திப்பு 
அத்தனை புனிதமானது.

உனது வெள்ளிக் கொலுசுகள் 
என்றைக்குப்  பேசும் என்று 
எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
அனால் உனது நினைவுகள் 
பேசாத அழகிய சிலையாய்!
மௌனம் களைவாய் அன்பே!

பசுமை சோலைத் தேடும் 
பாலைவன மணல்களாய் - உனது 
பதிலைத் தேடும் என் காதல் ஆசைகள்!

கானல் நீராய் வர வேண்டாம்.
மலைச் சாரலாய் வந்து விடு.
என் தாகம் தனித்து விடு அன்பே!

எட்டா தூரத்தில் அமைந்த 
விண்வெளி கூட 
பூமியை காதல் செய்கிறது.
பூங்காவில்  எட்டிய தூரத்தில் 
நீயும்  நானும்.

நீ ஒருமுறை கூட 
பூச்சூடி பார்த்ததில்லை.
நாம் தினமும் 
வந்து போகும் பூங்காவில் 
உன் கூந்தலேற 
ஒற்றைக் காலில் 
தவம் செய்யும் 
பூக்களைப் பார்த்தாயா?

ஒரே ஒரு முறை மட்டுமாவது
பூச்சூடி விடு.
பிறந்த பூக்களுக்கு வாழ்வு அளித்து 
சிறகுகள் இல்லா தேவதை 
என்பதை நிருபித்து விடு.

உன் பெயர் கூட தெரியாமல் 
உன்னை காதல் செய்யும் நான் 
உனக்கு வைத்த பெயர் என்ன தெரியுமா?
சிறகுகள் இல்லா தேவதை.

உன் பெயர் மட்டும் தெரிந்து  இருந்தால்
எனது கவிதையின் அனைத்து வரிகளிலும் 
எதுகை மோனையாக  
உனது பெயரே அமைந்திருக்கும்.

உன் இதழ்கள் பேசும் வார்த்தையை விட 
உன் காதணிகள் பேசும் கவிதை 
மிக மிக அருமை.
ரசிக்க முடியாமல் 
உன் பாதழகில் மயங்கிக் கிடக்கிறது
வெள்ளிக் கொலுசுகள்.

வானத்தில் ஆயிரம் ஆயிரமாய் 
நட்சத்திரங்கள் பூத்திருந்தாலும் 
நட்சத்திரங்களின் ராணியாக இருக்கும் 
ஒற்றை நிலா நீதான் பெண்ணே!

தேய்பிறை என்பதையே அறியாத 
உன் அழகைக் கண்டு 
தினமும் வியக்கத்தான் செய்கிறேன்!

பல அதிசயங்கள் உன்னில் அடக்கம்.
உன்னை அழகாக்கிய பத்து மாதங்கள்
பூமியிலே தங்கிய நிலா
சிறகுகள் இல்லா தேவதை
இன்னும் பல.....

வலியை தாங்கிய உளியாக நானும் 
செதுக்கப்பட்ட சிற்பமாக நீயும் 
செதுக்கிய சிற்பியாக 
நாம் வந்து அமரும் பூங்கா!

என் இதயம் துடிக்க வேண்டும் 
அதுவும் உனக்காக மட்டும்.
உன் இதயதில் இடம் ஒன்றை 
கொடுத்து விடு பெண்ணே!

எழுதி முடிக்கவும் மை தீர்ந்தது.
முற்றுப்புள்ளி இடவில்லை.
காற்புள்ளியோ(,)
அரைபுள்ளியோ (;)
உனது விழியோரம் 
மை தேடி வைத்து விடு!

புள்ளி வைத்தக் கோலங்களாய்
ஒவ்வொரு வரியும் மாறி விடும்.
தொடர வேண்டும் - இனி 
இது நமது புனிதப் பயணமாக!

நீ சம்மதம் தெரிவித்தால் 
காதல் தூதுவனாக
சிகப்பு ரோஜாவை அனுப்புகிறேன்.

என்றும் உன் அன்புடன் 

9 comments:

 1. இந்த காதல் கடிதம் பூங்காவில் வந்து அமரும் தலைவியைக் கண்டு தலைவன் எழுதியது போலத் தெரிகிறது.

  தலைவன் தலைவி யாரோ???

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ரம்யா. பூங்காவை மையமாக வைத்து எழுதிய கவிதை. மிக்க நன்றி

   Delete
 2. ரசித்தேன்...

  /// எட்டா தூரத்தில் அமைந்த
  விண்வெளி கூட
  பூமியை காதல் செய்கிறது. ///

  ReplyDelete
  Replies
  1. ரசிக்க தெரிந்தால் வாழ்க்கை சுகமாகத்தான் இருக்கும். இந்த விஷயத்தில் நீங்கள் கொடுத்து வைத்தவர்தான்.
   திண்டுக்கல் தனபாலனுக்கு நன்றி.

   Delete
 3. உன் பெயர் மட்டும் தெரிந்து இருந்தால் ..
  எனது கவிதை களின் அனைத்து வரிகளிலும்
  எதுகை மோனை யாக உன் பெயரே அமைந்திருக்கும் .....

  ரசித்த வரியில் ஒன்று....

  ReplyDelete
 4. ககவிதைகள்...

  க லையாய்..
  வி தையாய்..
  தை யலாய் .....

  உன்னை தழுவும் .....

  பா சத்தால்
  ஸ் பரிசதால் ...

  நீ கவிதைகளை தழுவியவன்.....

  இணையத்தில் உன் இனிய கவிதை தழுவல் தொடர வாழ்த்துகிறேன் ...

  அன்புடன்
  சங்கர்

  ReplyDelete
  Replies
  1. நன்றி சங்கர்.

   Delete
 5. Anaithu varikalum arumai

  ReplyDelete
 6. வணக்கம்

  தங்களின் வலைப்பக்கம் வருவது முதல் முறை என்று நினைக்கிறேன்....
  அனல் பறக்கும் வரிவடிவங்கள்
  காதல் இரசனையை திகட்டும்
  அழுதத்தை தேடி பருகினேன் -
  உங்கள் கவிவரிகளில்-கிடைத்தது
  மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

  தலைப்பு ஒன்றுதான் சொல்லும் பாடுபொருள் வித்தியாசம்


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

 
Top