நான் ஒரு பார்வை இல்லாதவன்!
இன்றைய சமுதாயத்தில்
ஊமை விழிகளின் உதாரணமாய்
பகலையும் இரவாய் நினைத்து
வாழ்கையை நகர்த்துபவன் நான்!
இரவுகள் ஆடை கழற்றி
பகல் பிறந்தது அந்த காலம்
அது கற்காலம்.
இரவுகளையே பகலாக்க
விழிகளாய் வந்தன
மின் விளக்குகள்!
இது இன்றைய காலம்.
நாகரிகம் வளர்ந்தாலும்
விஞ்ஞானம் செழித்தாலும்
என் விழிகளுக்கு ஒளி கொடுக்க
கண் தானம் ஒன்றே தீர்வு!
நிறங்கள் பல உண்டு
எங்களுக்குத் தெரிந்த
நிறம் என்னவோ
கருப்பு மட்டும்தான்.
அதுவும் சில நேரங்களில்
இருள் என்று
இதயம் உரைக்கிறது!
விரல் தொட்டு காசு அறியும்
விழி இல்லா விஞ்ஞானி நான்.
நிஜமாக நான் புலம்புகிறேன்
நிழலோடு என் வாழ்க்கை என்று!
இல்லாத விழிகளுக்கு
இமைகள் கொடுத்தான் கடவுள்.
நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்
இன்னொரு கடவுள் வருவான்
எனக்கு விழி கொடுக்க!
வானத்தின் நுழைவு அலங்காரம்
வானவில்லாம்.
அதன் நிறங்களோ ஏழாம்.
எங்களுக்குத் தெரிந்த நிறம் என்னவோ
கருப்பு மட்டும்தான்.
மலரும் பூக்களின்
மணத்தை நுகர்ந்தேன்.
நிறத்தை மட்டும்
விழிகள் பார்க்க முடிவதில்லை!
ரோஜா பூ வேறு
மிகவும் அழகாக இருக்குமாம்!
என் போன்றவர்கள்
இனியாவது பார்ப்பார்களா?
அந்த சிவந்த ரோஜாக்களையும்
விழி தானம் செய்ய போகும்
உங்களை போன்ற கடவுளையும்!
உங்களது தியாகத்தில்
உங்களது சிந்தனையில்
எங்கள் இமைகள்
இருள் மறக்கும்!
எங்களுக்கு ஒளி பிறக்கும்!
எங்கள் கருவறை இருள்
கடைசி வரை தொடர வேண்டாம்!
கண் தானம் செய்வீர்கள் தோழர்களே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக