Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்

இவள்பூலோக தேவதை | pooloka thevathai

Penmai
Penmai Kavithai


கண்ணால் காண்பதும் பொய் 
காதால் கேட்பதும் பொய் 
தீர விசாரிப்பதே  மெய்.

இடப்பக்க மூளை பல முறை 
இதயத்திற்கு உணர்த்தியது
விண்ணுலக தேவதையாக இருக்கலாம்.
இவள் பூலாக கன்னி அல்ல என்று!

எனது கவிதையின் கருவாக
கன்னி உனது அழகுகள் 
தேவதையின் அழகை போல் 
அமைந்ததால் - கன்னியே  
எனது கவிதை கூட
உன்னை சந்தேகப்பட்டது.
இவள் பூலாக கன்னி அல்ல என்று!

எனது உயிர் நண்பனாம்
என் பேனாவின் மை 
கவிதையின் வழியாக 
உன் அழகோடு கலந்ததால்
அவனும் உன்னை சந்தேகிக்கிறான்.
இவள் பூலாக கன்னி அல்ல என்று!

இறுதியாக என் மனமும் 
ஆறுதல் அடைந்தது.
உன் கன்னத்தை கிள்ளி
உண்மையை அறிந்ததினால்.
இவள் பூலோக கன்னி அல்ல என்று!
இவள் பூலோக தேவதை!





கவிதையான கனவுகள் | Kavithaiyaana kanavukal

Kanavu
Kanavu kavithai

இரவின் கனவுகளை 
கண்களில் சுமந்து 
விழியோரப் பார்வையால் 
எனக்கு காட்டி 
மொழி பெயர்க்கச்  
சொல்கிறாய்
கவிதையாக!


இன்றைய விவசாயி | Today Farmer

Vivasaayi
Indraiya vivasaayi

கழனியில் முளைத்த 
களைய வேண்டிய
களைகளாய் கட்டிடங்கள்.
களைய முடியாமல் 
இன்றைய விவசாயி!

சேறை சோறாக மாற்றும்
வித்தை தெரிந்து
விவசாயத்தில் 
பாதம் பதிக்க முடியாமல்
இன்றைய விவசாயி!

தன்னிலை மறந்து
நண்பகல் வெயிலில்
கழனியின் நடுவில்
கலப்பைப் பிடிக்கும்
துணிவு இருந்தும்
துணிச்சல் இல்லாமல் 
இன்றைய விவசாயி!

கழனியின் மகள்  
நாற்று வளர்ந்து 
பருவப் பெண்ணாய்
தலை சாய்க்கும் 
நெற்கதிரை காண முடியாமல்
இன்றைய விவசாயி!

காலனின் குறிப்பறிந்து
விளைச்சல் கண்டவன்
மாறி வரும் கலியுகத்தால்
விவசாய வளர்ச்சி காணாமல்
இன்றைய விவசாயி!

மலடியின் கனவில்
ஒரு சுகப் பிரசவமாய் 
விவசாயின் கனவில் 
அமோக விளைச்சலாம்!
கனவு காணும் 
இன்றைய விவசாயி!

கானல் நீரில் தாகம் 
தணித்துக் கொண்டு 
இன்றைய விவசாயி!

விளை நிலத்தின் அருமை
விலை போகும் நிலமாய்
விளைச்சல் தெரியாமல்
விவசாயத்தை வீழச் செய்த 
வியாபாரப் பைத்தியங்கள்
மானுடப்  பணப் பைத்தியங்கள். 
பைத்தியங்களை 
திருத்த முடியாமல் 
இன்றைய விவசாயி!





முதல் சந்திப்பில் | Muthal Santhippu

Mutham
Muthal Santhippu


உன் முதல் பேச்சு 
என் தேசிய கீதமாய் 
எழுதிய உன் உள்ளம்
உச்சரித்த உன் உதடுகள் 

தேசப்பற்று  மிக்கவன் நான் 
மறப்பதில்லை தேசிய கீதத்தை!

பெண்மைக்குள் ஓர் பெருமை 
புரிந்து கொள்ள முடியாத 
இன்னொரு பெண்மையாய் 
உனது கருவிழி கண்கள்!

உன் விழி பேசி நான் 
மறந்த வார்த்தைகளால்
நானும் அழகாய் தெரிந்தேன் 
உன் முக அழகின் எதிரொளிப்பில்!

மழலையாய் நீ சிரிக்க
மயங்கிய கருவிழியில் 
இமைக்க மறந்த இமைகள்.

இலக்கணப்பிழை  இல்லா 
எழுத்துப்பிழை இல்லா 
பெண்மை இலக்கணம் நீ!

பல்லக்கில் பவனி வரும்
கவிதை ராணி நீ!
தமிழுக்கு ஓர் கவிதை
இல்லை இல்லை 
தரணிக்கோர் கவிதை
உனது பெயர்.

கற்பனை மறந்த சிந்தனை 
கவிதை வடித்தது 
நிஜ உலகில் உன்னோடு
அந்த முதல் சந்திப்பில்!





வழி(லி) அனுப்பிய வறுமை | Varumai kavithai

varumai
Varumai Kavithai


அடுக்கி வைத்த
அட்டைப் பெட்டியாய் 
அழகு தரும் 
கணணி பூங்காவில் 
சுத்தம் செய்பவளாய் இவள்!

அழுக்குச் சுவடுகளை 
அழிக்கப் பிறந்துள்ளாய்.
அயனின் பார்வையால் 
அவதாரம் எடுத்திருக்கிறாய்.

படியும் அழுக்குகளில் 
பணம் சம்பாதிக்க 
வறுமை இவளை 
வழியனுப்பி வைத்திருக்கிறது!

இவள் தட்டும் தூசியில்
உயிர் பெற்றன 
பிளாஸ்டிக் பூக்கள்.

கடுகளவு தூசி கண்டாலும் 
கருவிழி ஆணையிட 
கரைந்து போகிறது.
கடல் அலை நுரையாய்  
கரை ஒதுங்குகிறது

இவள் உழைப்பால் 
உயர்ந்திருக்கிறது 
குப்பை மேடுகள்!

இவள் வேதனை கண்டு 
இளைப்பார துடிக்குது
துடைப்பங்கள்!

இவளுக்கு ஒய்வு கொடுக்க 
நடுநிசி நெருங்குவதற்காக 
நண்பகல் மொட்டு விரிக்க 
அந்தி வேலை மலருகிறது

அந்தரத்தில் தொங்கும் 
பகல் விளக்கு பகலவன் 
மறைந்து விடுகிறான்!

கைரேக பட்ட காசுகள் 
அகம் சொல்லும் சிந்தனையில் 
அரங்கேற்றம் பெறுகிறது
வீட்டுச் செலவுகளாய்!

ஆயிரம் நினைவுகளில் 
ஒரு நினைவு மட்டும் 
உயிர் பெற்றிருக்கிறது.

மீதமுள்ள நினைவுகளுக்காக 
பகலவனின் ஒளிக்கதிர் 
குடிசை வாயிலில்!






பசுமை இலைகளாய் - ஹைகூ

pasumai
Pasumai Ilaikal

பட்டு போன மரத்தில்  
பசுமை இலைகள் 
பச்சைக் கிளி கூட்டம்

ஹைகூ வாழ்க்கை | Hikoo life

vaalkai
Vaalkai kavithai

பயண இலக்கு தெரிந்து 
நிலையில்லாத பயணம் 
வாழ்க்கை

எறும்புக் கூட்டம் | Erumbu koottam

erumbu
Erumbuk koottam

மெல்லென நடை பயிலும் 
பாவையின் பின் நடக்கும் 
காளையின் நடைக்கு ஒப்ப 

மேவிய ஒலி எழுப்பி 
முன் செல்லும் வண்டி தொட்டு 
பின் செல்லும் பெட்டி போலும் 

அழித்திடும் தன்மை கொண்ட 
ஆயுதம் தோளில் தாங்கி செல்லும்
ஆண் மக்கள் படையைப் போல

இன்பமாய் ஒலித்த மணி 
இசையென கேட்ட நொடி 
ஒன்றினை ஒன்று தொட்டு
ஓடிடும் பள்ளி பிள்ளை யொத்து

காரது கறுத்ததாலே 
கவ்விய இரை வாய் தாங்கி 
முன்னொன்று முந்தி செல்ல 
பின்னொன்று அதை தொடர்ந்து 
சிற்றுடல் தனை கொண்டு 
சீரிய பயணம் செய்யும் 
சின்னஞ்சிறு  எறும்பின் கூட்டம்
தன் இடம் சேர வேண்டி 
தாரையாய் சென்றது காண்!






ஹைகூ பேரணி | Haikoo

Perani
Haikoo perani

கழனியை நோக்கி 
விடியற்காலையில் பேரணி
கிராமத்து விவசாயிகள்

எனக்கொரு காதலி இருந்திருந்தால் | Enakkoru kaathali irunthirunthaal

En kaathal
Enakoru kaathali

கவிதை எழுதி பேனா மை
காலியாகி இருந்திருக்கும்!
அவள் விழியோரம் மையில் 
விளைந்த கவிதையை 
விதைத்திருப்பேன்! 

அவள் மூச்சுக் காற்றை சேகரிக்க 
முயற்சி எடுத்து 
வெற்றியும் கண்டு இருப்பேன்!
பிறர் தீண்டாமல் இருக்க அதை 
நிலாவில் சேகரித்தும் வைத்திருப்பேன்!

அவள் சிரிப்பின் சிதறல்கள் 
என்  கவிதையின் கருவாயிருக்கும்!
அவள் வாசித்த கவிதை வரிகள் 
உதட்டோர சிவப்பாய் 
ஒட்டி இருந்திருக்கும்!

அவள் தேகம் கிள்ளி விளையாட 
ஆசை பட்டிருப்பேன்!
அதனால் தினமும் நகம்
வெட்டி இருப்பேன்!

கடல் அலை முத்தத்தில் 
கால் நனைத்திருப்போம்!
கரையாத நினைவு அது 
கல்வெட்டுகளாக மாறியிருக்கும்!

அவள் பாதத்தில் 
வெள்ளிக் கொலுசு ஒன்றை 
மாட்டி இருப்பேன்!
எட்டாவது  ஸ்வரமாக
உலகுக்கு உணர்த்தியிருப்பேன்! 

இன்பத்தின் எல்லை 
எதுவென்று தேடியிருப்பேன்!
பிரிவுக்கு இல்லை எல்லை 
என்று முடிவெடுத்திருப்பேன்!

மழையோ வெயிலோ 
ஒரே குடையில் பயணித்திருப்போம்!
உடல் பொய் உயிர் மெய் 
பல கலியுக காதல்களுக்கு 
உணர்த்தியிருப்பேன்!

சாஸ்திரம் அடங்கிய 
திருமண அழைப்பிதழில்
கவிதையாய் எங்கள் பெயரை 
அச்சடித்திருப்பேன்!

எனக்கொரு காதலி இருந்திருந்தால்!!!






கருவிழிகள் | Karuvili

kankal
Karuvili kavithai

பாலில் விழுந்த கருவண்டு  
உனது  கருவிழிகள் 
தொட்டுத்தூக்க முயற்சித்து   
தோல்வியைத் தழுவுகிறது!
உனது கண் இமைகள்.

காமராஜர் | Kamarajar

Kavithai kamarajar
Kaamarajar kavithai

ஏழைகளின் கல்விக் கனவு
விடியும் முன்னே பலிக்கிறது
கற்கண்டாய் இனிக்கிறது - உன் 
கல்வித்திட்டம்.
ஆரவாரம் கொள்கிறது 
மதிய உணவுத் திட்டம்.

மக்களுக்கு மகுடம் சுட்டி 
படிக்காத மேதையாக 
பண்பாளன் நீ ஆட்சி செலுத்த 
எளிமையும் நேர்மையும்
எட்டிப் பிடித்து
உன் தோளில் தொற்றிக் கொண்டது.

உன் இரு தோளிலும்
உயிர்த் தோழனாயாய் அமர 
நேர்மைக்கும் எளிமைக்கும் 
வாய்ப்பு கொடுத்தாய்!

இறக்கும் வரை 
இறங்க வில்லை - அவைகள் 
உன் தோளை விட்டு!

உனது எளிமையும் நேர்மையும் 
ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது
பள்ளி கல்லூரி பொது இடங்களில்
உருவச் சிலையாய்!

உன் சிந்தனையில் உதித்து 
உயிர் பெற்று 
கம்பீரமாய் காட்சி தருகிறது
பல தொழிற்சாலைகளும்
பல அணைக்கட்டுக்களும்!

நீ செய்த சாதனைகளால்
உன் உருவச்சிலை 
உயிர் பெற்று நிற்கிறது
பட்டி தொட்டி எல்லாம்!

மண்ணில் பிறந்து 
மனதை விட்டு நீங்காமல் 
சரித்திரம் படைத்த கர்ம வீரரே !
கிங் மேக்கரே!
ஏழைகளுக்கு உதவுவதில் வள்ளலே!
இந்தியாவின் மற்றுமொரு அண்ணலே!
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!





சுதந்திர தினக் கவிதை | Suthanthira thina kavithai

Augut
Suthanthira thinam

சுதந்திரம் பற்றிய இன்னும் ஓர் கவிதை , இங்கே கிளிக் செய்யவும்
http://nellaibaskar.blogspot.com/2018/07/suthanthiram-kavithai.html


அகரம் முதல் சிகரம் வரை 
ஆயிரம் வாய்ப்புகள் உண்டு
உலகை அறிந்திடு 
உழைப்பால் உயர்ந்திடு
உனக்கென ஓர் சரித்திரம் எழுதிடு!

உன் நெருங்கிய தோழனாய் 
உழைப்பு இருக்கட்டும்!
நெருங்கவே முடியாத எதிரியாய் 
சோம்பல் இருக்கட்டும்!

பலமுறை உன்னை 
நீயே கேட்டு விடு 
நான் ஏன் பிறந்தேன் என்று?

பல வெற்றி கண்ட பிறகு 
ஒரு முறை சொல்லி விடு 
சாதிக்கப் பிறந்தவன் நான் என்று !

இனியும் தாமதம் வேண்டாம்!
இறப்பதற்குள் சரித்திரம் படைப்போம்!
சுதந்திரம் வாங்கிய உறவுகளுக்கு
மன நிறைவோடு சமர்பிப்போம்!





பருவகால நினைவுகள் | Paruva kaala Ninaivukal


உன்னோடு சேர்ந்து 
உயிர் பெற்று 
உறவாட நினைக்கிறது - எனது 
பதினாறு வயது 
பருவகால நினைவுகள்.

அங்கீகாரம் பெறாத கவிதை | Poetry without signature


அவள் கையொப்பம் இட்ட
எந்தவொரு புத்தகமும் 
கவிதைப் புத்தகம்தான்!
உன் கையொப்பத்திற்காக 
உருகுகின்றேன்!
தினமும் ஏங்குகின்றேன்!

பூவே பூச்சூட வா

poove

நீ வந்து செல்லும் பாதையில் 
நடைபாதை பூக்களாக 
உனக்காக பூத்திருக்கிறேன்!
உதிராமல் காத்திருக்கிறேன்!
பூவே ! பூச்சூடிடு !

தளிர் விட்ட ரோஜா செடி


இலையின் நுனியில் 
இறந்து போன மழைத்துளி 
உயிர் பெற்று உறவாடுகிறது.
தளிர் விட்ட ரோஜா செடி!

இயற்கையின் சீற்றம்


மழைசாரலில் நனைந்திருக்கிறேன்
மனதை பறி கொடுத்திருக்கிறேன்
நதியின் வளைவுகள் 
நங்கையிடம் கூட இல்லை

மாற்றம் கொடுத்து 
மாற்றிக் காட்டியது 
மழையும் மண் சரிவும்.

உத்தர்கண்ட் பற்றி எழுத
உவமையும் 
உருவகமும் தேவையில்லை.

மரங்களை அழித்ததால் 
மண்சரிவை ஏற்படுதினாயோ?
மலராமலே பிஞ்சு மொட்டுகளை 
மண்ணில் பதித்தாயோ ?
மழலைச் செல்வமும் 
மக்கட் செல்வமும்
மகத்தானதல்லவா ?

தொலைந்து போன உயிர்கள் 
தொலைவிலா ? அருகிலா ?
தொலைக்காட்சி செய்தி கூட 
தெளிவாகத்  தெரிவிக்கவில்லை.

வெள்ளப்பெருக்கு 
வெகு விமரிசையாய்
அடித்துச் செல்லப்பட்ட 
அனைத்து வகை மரங்களோடு
அணிவகுப்பு யாருக்காக?

மிதந்து வந்த மரங்களும் 
மாளிகைகளும் சொல்கிறது
மீண்டு வர வருடம் ஆகுமாமே?

கரையைத் தாண்டி நீ வர 
கரைபுரண்டு வெள்ளம் ஓட
கலை இழந்து 
கற்சிலையாய் நாங்கள்.
கற்காலத்தை நோக்கி நாங்களும்
கடல் அன்னையை நோக்கி நீயும்.

அரசியலை நம்பவில்லை 
அன்னையே உன்னை நம்புகிறேன்
எங்கள் இயற்கை அன்னையே !
இனிமேல் வேண்டாம் 
இது போன்றதொரு 
வெள்ளப்பெருக்கும் மண்சரிவும்.




மொழி பெயர்க்கப்பட்ட கவிதை | mozhi peyarkkappatta kavithai


மொழி பெயர்க்கப்பட்ட கவிதை
உன் கண்ணில் தெரிகிறது
தினம் தினம் வாசித்து 
தற்பெருமை கொள்கிறது 
உன் வீட்டு கண்ணாடி பிம்பம்!

பிறந்த நாள் பரிசு


அன்று ஒரு நாள் 
அநாதையாக
தரிசு நிலத்தில் 
தனி மரமாய் 
தவித்துக் கொண்டிருந்தேன்!

வாழ்வா? சாவா ? என்று 

பத்து வயது சிறுவன் நீ 
பக்கத்தில் வந்தாய் 
பதை பதைத்தது மனம்
பிய்த்து எறிந்து விடுவாயோ என்று!

தண்டுப் பக்கம் அருகில் 
தடிமனைக் கொண்டு 
மண்ணைக் கிளரினாய்.
மனமோ சிந்தனையில்
வாழ்வா? சாவா ? என்று 
உன் வயது பத்துதானே...

ஆழமாய் தோண்டி 
ஆட்டி ஆட்டி
ஆணி வேரைப் பிடுங்கினாய்.

நீ கடந்து செல்லும் தூரம்
நீளமாக இருக்கும் போல
தோள் கொடுத்து 
தோளில் சுமந்து கொண்டாய் 

படிக்கும் பையன் நீ 
பள்ளிக் கூடம் வந்து சேர்ந்தாய்.
பத்து மணி ஆனது.

பள்ளம் தோண்டினாய்
பதித்தாய் என்னை மண்ணில்.

ஆனந்தம் தொற்றிக் கொண்டது 
ஆதி முதல் ஆணி வேர் வரை
ஆளப் போகிறேன் மண்ணை என்று!

வாழ்வா? சாவா?
வினாக்குறி என்னுள் 
விடை பெற்றுக் கொண்டது!

உன் பிறந்த நாள் பரிசாக 
உன் பள்ளி  கூடத்தில் நான்!






தந்தையர் தினம்

Fathers day
Fathers day Kavithai

உள்ளங்கை ரேகையில்
உலவிக் கொண்டிருக்கிறது
உற்சாகமாய் நீங்கள் 
கை பிடித்து நடை பழக்கியது!

பள்ளி செல்லும் 
காலை வேளையிலும் 
திரும்பி வரும்
மாலை வேளையிலும்
தோள் கொடுத்து சுமந்தாய்!
தோழனாய் வாழ்க்கையில்
தோள் கொடுத்து உயர்த்தினாய்!

பள்ளி கல்லுரி என்று பல 
பாரங்களை நான் கொடுக்க 
பாசத்தோடு சுமந்து கொண்டாய்!

வாழ்க்கை எனும் மலையின் 
அடிவாரமாக நீங்கள் இருக்க 
உச்சி முகடுகளில் இருந்து 
உரக்க முழங்குகிறேன்!

உயர்ந்தது உங்களால்தான்!

உதிக்கத் தெரிந்து 
மறையத் தெரியாத 
சூரியனாய் நீங்கள் இருக்க 
உங்கள் ஒளிக்கதிர் பெற்று 
உயிர் வாழ்கிறது என் 
உயிர் வார்த்தைகள்!

தந்தை சொல்மிக்க 
மந்திரம் இல்லை!

தந்தையர் தின வாழ்த்துக்கள்!






கடந்து வந்த பாதை

rayil
Kadanthu vanth paathai


ஜன்னலோர இருக்கை
உரசிய குளிர் காற்று 
நினைவில் முன்னால் காதலி

பிரிந்து வந்த குடும்பம்
சேர்த்து வைத்த ஊதியம்
நகரத்தை நோக்கி பயணம் 

அழகும் அறிவும் சேர்ந்த 
கன்னி இளமை அருகில் 
அனுபவமும் அறிவும் சேர்ந்த 
வயதான முதுமை எதிரில்

வளைவுப் பாதையில்
வளைந்து கொடுத்த ரயில் 
வரையப்பட்ட கன்னி இடை

அழுது கொண்டிருந்த குழந்தை 
ஒரு நாள் தொட்டில் 
ரயில் இருக்கை நடுவில் 

இரவு நேரச் சூரியனாய் 
ரயில் பெட்டி விளக்கு
பகல் நேர நிழலாய் 
தொடர்ந்து வந்த 
தொடர் வண்டி நிழல்கள்

நடைமேடையில்
பாதங்கள் பட 
கண்களில் தெரியவில்லை 
நினைவில் தெரிகிறது 
கடந்து வந்த பாதை
முன்னோக்கிச் செல்லும் ரயிலில்!





ரயில் குழந்தை | rayil kulanthai

Rayil
Rayil kulanthai

ஜன்னலோர இருக்கையில் 
இன்பமாய் நான் அமர்ந்திருக்க 
இரவு நேர குளிர் காற்று 
செவியோரம் ஏதோ சொல்ல 
மொழி பெயர்க்கத் தெரியாமல் 
சுகம் காண்கிறது என் உள்ளம்.

ஆம்!
குழந்தையின் மழலைப் பேச்சு 
சில நேரங்களில் புரிவதில்லை!




மழலைப் பேச்சு

மழலைப் பேச்சு 
சில நேரங்களில் புரிவதில்லை
என் காதலியின் முனுமுனுப்பு.

ஹாய் இன்று சண்டே

ஹாய் இன்று சண்டே ...

பணி செய்த பழைய வாரம்
பறந்து போய் புதியதோர்
வாரம் பூக்கும் நாள் ...

தூக்கம் போகுமுன்
தூங்கி எழ வேண்டுமே என்ற
ஏக்கம் இல்லை ...


குளியல் இல்லை

பேருந்து தாமதம் ,
போக்குவரத்து நெரிசல் ,
ஓடும் நேரம்
ஒன்றுமே தேவை இல்லை ...

பணி இல்லை....
கணிப்பொறியை
கண் துஞ்ச பார்க்க வேண்டிய
கடமை இல்லை ....
மின் அஞ்சலுக்கு
மாற்றஞ்சல் அனுப்பும்
தேவை இல்லை ...
கைபேசி அழைப்பில்
கத்தி  பேசும்
கண்ணிய அதிகாரி பற்றிய
கவலை  இல்லை .

முழுவதும் தூங்கவேண்டும் என்ற
முடிவு படி படுத்தால் கூட
விழி மூடிட முடியவில்லை 

வேலை நாள்களில்
நடை பயணம் செல்லும் நிமிடங்கள்
விடுமுறை நாளென்றால்
விருடென்று ஓடுவதை
நம்பவே முடியவில்லை .

மாலை யான பின்னும்
மகிழ்ச்சி எனபது
மருந்துக்கு  கூட தோன்ற வில்லை ..

இரவு வந்ததும் ..
அடுத்த நாள் 
பணியை பற்றி
அடிக்கடி எண்ணி எண்ணி ..
தூக்கமே வரவில்லை ...

ஹாய்.......
இன்று.......
சண்டே .......





மழை குழந்தையை தா


ஏ மேகமே !

பகலவனின் பார்வை
கொடூரத்தால் பலனின்றி போனாய் !

தன் குளிர் காதலியோடு 
சண்டையிட்டு வெப்பத்தை தழுவி 
வியர்வையை பரிசளிக்கும் 
தென்றல் காற்றிடம் 
நேரம் கடன் வாங்கி 
தேசம் எங்கும் பயணித்து பார் !

வெள்ளை கூந்தலாய் 
அருவி வழிந்தோடிய மலைகள் ...
கூந்தல் இழந்த பருவபெண்ணாய்..
அழகு இழந்து இருப்பதை பார் !

மாலை வான நட்சதிரமாய் 
பூக்கள் குலுங்கிய சோலைகள்..
பாலை தேசமாய் படர்ந்திருக்கும் 
நிலையை பார் !

நீராடிய பெண்ணின் 
முகத்தில் நீர்த்துளியாய் 
பனி படர்ந்த புல்வெளிகள் 
பாழ் பட்டிருக்கும் சோகம் பார் ...

நஞ்சையும் புஞ்சையும் 
விளைந்த நிலங்கள் எல்லாம் 
செருப்பின்றி நடந்த பாதமாய் 
வெடித்து கிடப்பதை பார் !

மீன்கள் துள்ளிய நீர்நிலைகள் 
தன் தாகம் தீர்க்க நீரின்றி 
தவிப்பதை பார்...

நிலைமை பார்த்த பின் ...

உன் கடல் காதலியோடு 
வான வீதியில் சரசமாடி 
மழை குழந்தையை தா !


மண்ணின் மகிழ்ச்சிக்காக !





சினிமாவின் மறுபக்கம் | cinema marupakkam


பல பாடல் வரிகளில் 
கவிதை இல்லை 
கற்பனையும் இல்லை 
கலாச்சார சீரழிவு 
தெளிவாகத் தெரிகிறது.

சில நகைச்சுவை வசனங்களில்
சிந்தனை இல்லை.
இரட்டை அர்த்தங்களுக்கு 
விதி விலக்கு  இல்லை.
இங்கே அவமானம் 
பெண்மைக்கு சமர்ப்பணம்.

ஒவ்வொரு பாடலும் 
பிரதிபலிக்கிறது
வாலிப பருவத்தின் 
புட்டி பால் மது என்று!

ஒளியும் ஒலியும் 
ஒழுங்காய் அமையவில்லை
ஒழுக்கம் கெட்டுப் போகிறது.
எங்கள் சினிமாவில்....






பருவக் கோளாறு...


படிப்பை முடிக்காமல்
சிந்தனை தெளிவில்லாமல் 
பண்பாடு அறியாமல் 
பணம் சம்பாதிக்காமல் 
செலவழிக்க தவறாமல் 
சரியான வயதை எட்டாமல் 
இவர்களுக்கு மட்டும்
வந்து விடுகிறது காதல்!

பிஞ்சிலே சில காய்கள்
வெம்பி பழுப்பது உண்டு.
இவர்களுக்கு எப்பொழுதுமே 
அக்கினி கோடை காலம்தான்!

தாகம் தணிந்த மயக்கம்


குப்பைத் தொட்டியில்
Kuppai thotti
குப்பைத் தொட்டியில்
குழந்தையாய்...

சதை கொண்ட ஏக்கங்கள்
கட்டிலில்
தாகம் தணிந்த மயக்கம்
குப்பைத் தொட்டியில்!

பத்து மாத பாரம் தாங்காமல்
தூக்கி எறிந்தாயோ
சுமைகள் உனக்கு சுகம் தானே!

என் அழுகை குரல்
கண்காட்சி ஒன்றை ஏற்படுத்த
மாந்தர்கள் கூடி நின்று
உன்னை அழுக்காய் விமர்சிப்பார்களே!

ஐயோ அம்மா
நான் என்ன செய்வேன்
குப்பையில் கிடந்ததால்
அறிவில்லா மாந்தர் என்னை
அழுக்காய் பார்ப்பார்களே!

குப்பைத் தொட்டியில் குமுறல்கள்
என் தேசத்து கீதங்கள்
என் நினைவுச் சின்னமாய்
என் அகத்தினிலே பதிந்திருக்கும்
என் தேசத்து குப்பைத் தொட்டி!

என் தேசத்து ஒரு நாள் தொட்டில்!

காலை நாளிதழ் பார்த்து
உன் வேதனை நிம்மதி அடைகிறது
குப்பைத் தொட்டியில்
பச்சிளங் குழந்தை மீட்பு!






பேசிய கண்கள்



நீ பேசும் வார்த்தைகள் 
என் செவிகளுக்கு  எட்டவில்லை 
கண்களுக்கு எட்டியது.
நீ கண்களால் பேசுவதால்!

வறுமையின் விலை...


Varumai
Varumai kavithai
வறுமை  சில நேரங்களில்
வீதியில் விலை போகிறது
விபச்சாரி

பூக்களின் ராணி மல்லிகை | jasmine flower kavithai --

malli
Mallikai


மல்லிகைப் பூவின் 
மணத்தை தென்றலும் 
இரவல் வாங்கி உலா வருகிறது.
மல்லிகைப் பூவிடம் கடன் பட்ட தென்றல்!

வாலிப வயதில்தான் புரிந்தது
காலை வேளையில் மலராமல் 
அந்தி வேலை ஏன் மலருகிறாய் என்று!

உன் மணம் கண்டுதான் 
இரவுகள் உனக்கு பட்டம் அளித்திருக்கிறது
காமத்தின் தலைவன் மல்லிகை என்று!

ஆடை அணியாமல் 
அளவற்ற்ற பூக்கள் இருந்தாலும் - என்
அகம் ரசிப்பது என்னவோ உன்னைத்தான்!

உன் அழகினை ரசிக்க 
மாலை நேர சூரியன் 
மேற்கில் உதிக்க ஆசைபடுகிறான்.

உன்னை காதல் செய்ய 
ரோஜாவும் ஆசை கொண்டதால் 
உன்னோடு சேர்ந்து 
நூலில் கோர்க்கப்படுகிறான்.

பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும் 
பழமொழி இது 
பழமை மாறவில்லை - மல்லிகையினால்!
பொறாமையில் சிவந்தது ரோஜாக்கள்.

உன் அழகை ரசிக்க 
இரவெல்லாம் விழித்துக் கொண்டே 
அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றான் 
விண்ணுலக நிலவு.

மல்லிகைப் பூவை ரசிக்க
மணம் நுகர 
விண்ணைத் தாண்டி 
வந்தாலும் வரும் - இந்த 
விண்ணுலக நிலவு!

நிலவிடமிருந்து ஒளி வாங்கி 
நிகரில்லா பெருமை சேர்க்கிறாய்.
உன்னை வீழ்த்த ஒரு பூ 
உலகினில் இல்லை.
பூக்களின் ராணி மல்லிகையே!





காதல் கடிதம் | kaathal kaditham


பெயர் தெரியாத
என் சிறகுகள் இல்லா தேவதைக்கு...

அழகின் எல்லை எதுவரை என்று 
நான் ஆராய்ந்த பொழுதுதான் 
உன்னை முதலில் கண்டேன்!

அழகு என்னும் அளவுகோலின் 
ஆரம்பமும் சரி!
உச்சமும் சரி!
நீயே! நீ மட்டும்தான் பெண்ணே!

மன நிம்மதி தேடி 
ஆலயம் செல்கிறேன் - உன்னை 
முதலில் சந்தித்த பூங்காவிற்கு.
முதல் சந்திப்பு 
அத்தனை புனிதமானது.

உனது வெள்ளிக் கொலுசுகள் 
என்றைக்குப்  பேசும் என்று 
எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
அனால் உனது நினைவுகள் 
பேசாத அழகிய சிலையாய்!
மௌனம் களைவாய் அன்பே!

பசுமை சோலைத் தேடும் 
பாலைவன மணல்களாய் - உனது 
பதிலைத் தேடும் என் காதல் ஆசைகள்!

கானல் நீராய் வர வேண்டாம்.
மலைச் சாரலாய் வந்து விடு.
என் தாகம் தனித்து விடு அன்பே!

எட்டா தூரத்தில் அமைந்த 
விண்வெளி கூட 
பூமியை காதல் செய்கிறது.
பூங்காவில்  எட்டிய தூரத்தில் 
நீயும்  நானும்.

நீ ஒருமுறை கூட 
பூச்சூடி பார்த்ததில்லை.
நாம் தினமும் 
வந்து போகும் பூங்காவில் 
உன் கூந்தலேற 
ஒற்றைக் காலில் 
தவம் செய்யும் 
பூக்களைப் பார்த்தாயா?

ஒரே ஒரு முறை மட்டுமாவது
பூச்சூடி விடு.
பிறந்த பூக்களுக்கு வாழ்வு அளித்து 
சிறகுகள் இல்லா தேவதை 
என்பதை நிருபித்து விடு.

உன் பெயர் கூட தெரியாமல் 
உன்னை காதல் செய்யும் நான் 
உனக்கு வைத்த பெயர் என்ன தெரியுமா?
சிறகுகள் இல்லா தேவதை.

உன் பெயர் மட்டும் தெரிந்து  இருந்தால்
எனது கவிதையின் அனைத்து வரிகளிலும் 
எதுகை மோனையாக  
உனது பெயரே அமைந்திருக்கும்.

உன் இதழ்கள் பேசும் வார்த்தையை விட 
உன் காதணிகள் பேசும் கவிதை 
மிக மிக அருமை.
ரசிக்க முடியாமல் 
உன் பாதழகில் மயங்கிக் கிடக்கிறது
வெள்ளிக் கொலுசுகள்.

வானத்தில் ஆயிரம் ஆயிரமாய் 
நட்சத்திரங்கள் பூத்திருந்தாலும் 
நட்சத்திரங்களின் ராணியாக இருக்கும் 
ஒற்றை நிலா நீதான் பெண்ணே!

தேய்பிறை என்பதையே அறியாத 
உன் அழகைக் கண்டு 
தினமும் வியக்கத்தான் செய்கிறேன்!

பல அதிசயங்கள் உன்னில் அடக்கம்.
உன்னை அழகாக்கிய பத்து மாதங்கள்
பூமியிலே தங்கிய நிலா
சிறகுகள் இல்லா தேவதை
இன்னும் பல.....

வலியை தாங்கிய உளியாக நானும் 
செதுக்கப்பட்ட சிற்பமாக நீயும் 
செதுக்கிய சிற்பியாக 
நாம் வந்து அமரும் பூங்கா!

என் இதயம் துடிக்க வேண்டும் 
அதுவும் உனக்காக மட்டும்.
உன் இதயதில் இடம் ஒன்றை 
கொடுத்து விடு பெண்ணே!

எழுதி முடிக்கவும் மை தீர்ந்தது.
முற்றுப்புள்ளி இடவில்லை.
காற்புள்ளியோ(,)
அரைபுள்ளியோ (;)
உனது விழியோரம் 
மை தேடி வைத்து விடு!

புள்ளி வைத்தக் கோலங்களாய்
ஒவ்வொரு வரியும் மாறி விடும்.
தொடர வேண்டும் - இனி 
இது நமது புனிதப் பயணமாக!

நீ சம்மதம் தெரிவித்தால் 
காதல் தூதுவனாக
சிகப்பு ரோஜாவை அனுப்புகிறேன்.

என்றும் உன் அன்புடன்